மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி, எம்ஆர்ஐ ‘ஸ்கேன்’ ரிப்போர்ட் வழங்குவதற்கு மருத்துவர்கள் தாமதம் செய்வதால் நோயாளிகள் தினமும் வந்து காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நோயின் தன்மை, தீவிரத்தைக் கணிக்க நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சிடி ஸ்கேன் எடுக்க 90 முதல் 100 நோயாளிகளும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 40 முதல் 50 நோயாளிகளும் கதிரியக்கப் பிரிவுக்கு வருகிறார்கள். சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அதன் பாதிப்பு விவரங்களை பொறுத்தும் குறிப்பிட்ட தொகை கட்டணம் பெறப்படுகிறது.
கட்டணம் கட்டியப் பின் வரிசை முறைப்படி நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளுக்கு சில சமயங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், சாப்பிடக்கூடாது என்றும் சில கட்டுப்பாடுகளை விதிக்கப்படும். அப்படி கட்டுப்பாடுகளுடன் வரும் நோயாளிகள், நீண்ட நேரம் காத்திருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அரைநாள் பொழுது கழிந்து விடுவதோடு ரிப்போர்ட் வாங்குவதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகிவிடுகிறது. உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுவோர்களுக்கு ஸ்கேன் ரிப்போர்ட் வழங்க தாமதமானாலும் வாட்ஸ் அப் மூலம் அதன் விவரம் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சைப்பெறுவோருக்கு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து சென்றால் மட்டுமே மருத்துவர்கள் அடுத்தக்கட்ட சிகிச்சை பெறமுடிகின்ற நிலை உள்ளது. இதனால், வெளி நோயாளிகள் ஸ்கேன் ரிப்போர்ட்டை தாமதத்தால், உடனடியாக சிகிச்சைப் பெற முடியாமல் தவித்துவருகிறார்கள்.
ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரை கதிரியக்கப் பிரிவில் 11 உதவிப்பேராசிரியர்கள், 3 பேராசிரியர்கள், 18 பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகிறார்கள். இப்படி போதுமான ஊழியர்கள் பணிபுரிந்தும் நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகத்தால் ஸ்கேன் ரிப்போர்ட் உடனுக்குடன் வழங்க முடியாத நிலையே உள்ளது.
பொதுவாக ஸ்கேன் காலையில் எடுத்தால் மாலையில் ரிப்போர்ட் வழங்க வேண்டும். ஆனால், இங்கு மறுநாள் மாலையே கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் 2 நாள் கழித்தே ரிப்போர்ட் வழங்கப்படுகிறது என நோயாளிகள் குற்றம் சுமத்துகிறார்கள். நோயின் தீவிரத்தை அறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கே மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், நோயின் தீவிரத்தை அறிவதற்கே 2 முதல் 3 நாள் ஆவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நோயாளிகளின் புகார் தொடர்பாக பேசிய கதிரியக்கத்துறை துறை மருத்துவர்கள், ‘‘நோயின் சிக்கல் அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு விவரத்தை மருத்துவர்கள் கலந்து ஆலோசித்தே ரிப்போர்ட் வழங்க முடியும். அதற்கு கூடுதலாக ஒரு நாள் தாமதமாகலாம்’’ என்றனர்.
மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறுகையில், ‘‘ரிப்போர்ட் சில நேரங்களில் வர தாமதமாகலாம். ஆனால், வாட்ஸ் அப் மூலம் நோயின் தாக்கம் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு கதிரியக்கத்துறையில் இருந்து சென்றுவிடும். அதனால், சிகிச்சை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படாது’’ என்றார்.