தினந்தோறும் 500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் தினக்கூலி ஒருவருக்கு 37.5 லட்ச ரூபாய் வருமான வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நோட்டீசை அந்த தினக்கூலி நபர் காவல்துறையில் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை பல திடுக்கிடும் தகவல்களை கண்டுபிடித்து உள்ளது.
2 மாதங்களில் 28,000 கிமீ பயணம்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-ஆல் ஏற்பட்ட பிரச்சனை!

தினம் ரூ.500 வருமானம்
பீகார் மாநிலத்தின் ககாரியா என்ற மாவட்டத்தை சேர்ந்த மகுனா என்ற கிராமத்தில் வசிப்பவர் கிரிஷ் யாதவ். இவர் தினந்தோறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்.

வருமான வரித்துறை
இந்த நிலையில் திடீரென சமீபத்தில் இவருக்கு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில் அவருடைய பான் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள வருமானத்திற்கு 37.5 லட்ச ரூபாய் வருமான வரி பாக்கி இருப்பதாகவும் உடனடியாக அதைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

புகார்
தினமும் 500 ரூபாய் மட்டுமே வருமானம் வரும் தனக்கு ரூ 37.5 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி பாக்கியா? என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பான் கார்டு
கிரிஷ் யாதவ் ஒரு முறை டெல்லியில் வேலை செய்தபோது ஒரு புரோக்கர் மூலம் பான் கார்டு வாங்க முயற்சி செய்துள்ளார். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். ஆனால் புரோக்கரிடம் இருந்து பான் கார்டு குறித்து எந்தவிதமான தகவலும் வரவில்லை என்பதால் அவர் அதை மறந்துவிட்டு மீண்டும் அவர் டெல்லியில் இருந்து பீகாருக்கு வந்துவிட்டார்.

மோசடி
இந்த நிலையில் அந்த பான் கார்டில் இருந்து தான் தற்போது கிரிஷ் யாதவ்வுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. வருமானவரித் துறையின் அறிக்கையின்படி கிரிஷ் யாதவ், ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவருடைய சம்பளத்தின் அடிப்படையில் 37.5 லட்சம் ரூபாய் வரி செலுத்தாமல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை
ஆனால் போலீஸார் விசாரித்தபோது தான் இதுவரை ஒரு முறை கூட ராஜஸ்தானுக்கு சென்றதில்லை என்றும் அப்படி ஒரு நிறுவனம் இருப்பதே தனக்கு தெரியாது என்றும் கிரிஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருடைய பான் கார்டை இடைத்தரகர் வேறு யாரிடமாவது கொடுத்து மோசடி செய்து இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Daily Wager in Bihar’s Khagariya Gets Income Tax Notice of Rs 37.5 Lakh
Daily Wager in Bihar’s Khagariya Gets Income Tax Notice of Rs 37.5 Lakh | தினம் ரூ.500 சம்பாதிக்கும் தினக்கூலிக்கு ரூ.37.5 லட்சம் வரிபாக்கி… வருமான வரித்துறை நோட்டீஸ்