பெரும்போகத்திற்கு தேவையான பசளையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை

பெரும்போகத்திற்கு தேவையான பசளையை பெற்றுக்கொள்வதற்கான கேள்விப்பத்திரத்தை தயாரிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்த இரண்டாவது தொகுதி பசளையை பொறுப்பேற்ற நிகழ்வுக்குப் பின்னர் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த பசளை நேற்று இலங்கையை வந்தடைந்தது. இவற்றை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு ஏற்றும் நடவடிக்கை நேற்றே ஆரம்பமானது.

இந்த உரத்தை பகிர்ந்தளிக்கும் போது தேயிலை மற்றும் சோளச் செய்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பசளையை இலங்கைக்கு கையளிக்கும் வகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவும் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்டார். இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமது நாடு தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் விசேட ஆதரவின்கீழ் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட 21,000 தொன்கள் நிறையுடைய உரத்தொகுதியை, உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக கையளித்தார். 2022ல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய 4பில்லியன் அமெரிக்கடொலர் பெறுமதியான நிதி உதவியின் கீழ் கடந்தமாதம் வழங்கப்பட்ட 44,0000 தொன் உரத்திற்கு மேலதிகமாக இப்புதியதொகுதி வழங்கப்படுகின்றது.

இதன் மூலம், இலங்கை விவசாயிகளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன் உணவுப்பாதுகாப்புக்கும் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. இந்தியா – இலங்கை இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம், இந்தியாவுடனான நெருங்கிய உறவு ஆகியவற்றின் மூலமாக மக்களடையும் நன்மைகளை இது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்தள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.