மதுரை: மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டனர். அதில், 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி, 23 கிலோ பழைய பரோட்டாகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அசத்தலான அசைவ, சைவ சாப்பாட்டிற்கு சிறப்பு பெற்ற ஆன்மீக சுற்றுலாத்தலமான மதுரைக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் தினமும் வந்து செல்கிறார்கள். இவர்களில் சாப்பிடுவதற்காகவே மதுரை வந்து செல்வோரும் உண்டு. அந்தளவுக்கு மதுரை ஹோட்டல்களில் உணவு பிரியர்களை கவர விதவிதமான சாப்பாடுகள் சமைத்து வழங்கப்படுகின்றன. சமீப காலமாக மதுரையில் உள்ள ஹோட்டல்களில் வணிக நோக்கில் தரமில்லாத உணவுகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குற்றம்சாட்டினர்.
அதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமையா பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் இரு குழுவாக பிரிந்து சென்று தெப்பக்குளத்தில் இருந்து குருவிக்காரன் சாலை வரையில் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு செய்தனர்.
ஹோட்டல்களில் சாப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் அதிகாரிகள் உணவின் தரம் குறித்து விசாரணை செய்தனர். சமையல் அறைக்குள் சென்று உணவு சமைக்கும் முறையையும், உணவுப்பொருட்கள் தரத்தையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராமையா கூறுகையில், ‘‘25 கடைகளை ஆய்வு செய்தோம். 5 கிலோ கெட்டுப்போன பழங்கள், 25 கிலோ கலரி சிக்கன், 23 கிலோ பழைய பரோட்டோ, 10 லிட்டர் பழைய குழம்பு போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்துள்ளோம். அந்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தோம். 6 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இந்த ஆய்வு தொடரும்’’என்றார்.