இலவசங்கள் தொடர்பான வழக்கு: தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய உத்தரவு!

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் விசாரணையில், தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது?

இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது? இதில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களும் இருக்கின்றன. எனவே இலவசங்கள் வழங்குதல் என்பது சிக்கலான விவகாரம் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி வழக்கு விசாரணை முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை நடந்த நிகழ்விற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் இலவசங்கள் தொடர்பான விஷயத்தில் விரிவான விவாதம் தேவை என்பதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.

ஏற்கனவே தேர்தல் இலவசங்கள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சுப்பிரமணிய பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவுகளை பரீசீலனை செய்ய வேண்டும் என்பதால் கூடுதல் விசாரணைக்காக வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். மேலும் நீதித்துறை தலையீட்டின் தேவை என்ன?

நிபுணர் குழுவை நியமிப்பது இந்த விவகாரத்தில் எந்த அளவிற்கு உதவும்? போன்ற சில முக்கியமான முடிவுகள் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டார். மேலும், தேர்தல் ஜனநாயகத்தில் மக்களிடம் தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது. வேட்பாளர்களையும் சரி. கட்சியினரையும் சரி.

அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். வாக்களிக்கும் போது கட்சியின் செயல்திறன்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சினை குறித்து ஆராய குழு அமைப்பதே சரியானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.