இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் நீண்ட காலமாக மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றின் அதிபர் அங்குள்ள மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அதிகார சபையின் அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் பின்னர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் இந்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த அதிபர் பாடசாலை மாணவர்களை தனது விடுதிக்கு வரவழைத்து அவர்களுக்கு பணம், பரிசில்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதிபரை சிறையில் அடைத்ததன் பின்னர் ஏனைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு எதிராக தகவல்களை வழங்கியதாகவும், அது உண்மைதானா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாடசாலையின் சில ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் போன்றோர் சாட்சிகள் மீது அழுத்தம் கொடுத்து, இதுபோன்ற தகவல்களை வழங்குவதை தடுக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் மேலும் பல சிறுவர்கள் உள்ளனர். சிலர் வெட்கத்தினாலும் பயத்தினாலும் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதில்லை. இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் பிள்ளைகள் குறித்து, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித இலக்க தொலைபேசி அல்லது 071 8387130 என்ற இலக்க தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான தகவலகளை வழங்கும் பிள்ளைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும்;, தகவல்களை மறைக்க அழுத்தம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.