இந்தியாவின் 'தேஜஸ்' போர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா விருப்பம்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா ஆர்வம் கொண்டு உள்ளதாகவும், அந்நாட்டு விமானப்படையில் இணைக்கவும் திட்டமும் அந்நாட்டிடம் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ளார். அப்போது, அந்நாட்டு அதிபர் ஆல்பெர்டோ பெர்ணாண்டசையும், பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் சன்டியாகோ கபிரியோவை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, மருந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், யோகா, பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

ஆயுதப் படைகள், பாதுகாப்புப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உபகரணங்களின் கூட்டு உற்பத்திக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருதரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இருதரப்பு வர்த்தகம் 2021 ஆம் ஆண்டில் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதன் மூலம், அர்ஜென்டினாவின் 4வது பெரிய வர்த்தக கூட்டாளி இந்தியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறகு இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானத்தை வாங்கவும், அதை தனது விமானப்படையில் இணைக்கவும் அர்ஜென்டினா ஆர்வம் கொண்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மலேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளும் தேஜஸ் போர் விமானத்தை வாங்க ஆர்வம் கொண்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.