வேலைவாய்ப்பைப் பெருக்க மிகச் சிறந்த வழி..!

இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருக்கிறது. இன்றைக்கு நம் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது பாசிட்டிவ்வான விஷயம். ஆனால், இத்தனை இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது எப்படி என்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால்.

இதற்கு அருமையான வழி ஒன்றைச் சொல்லி இருக்கிறது பெங்களூருவில் உள்ள ‘டீம்லீஸ்’ (TeamLease) நிறுவனம். மனிதவளத் துறை சார்ந்த இந்த நிறுவனம், கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்களைத் தொழில் நிறுவனங்களில் பயிற்சி மாணவர்களாக (apprentices) சேர்த்து, தொழில் பயிற்சியை அளிப்பதன் மூலம் திறமையான பணியாளர்களை உருவாக்க முடியும்; வேலைவாய்ப்பையும் கணிசமாக உயர்த்த முடியும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறது.

‘‘கல்லூரி மாணவர்களுக்கு வேலைப் பயிற்சியைத் தர தொழில் நிறுவனங்கள் அக்கறை காட்டுவதே இல்லை. 339 அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் 150 நிறுவனங்களே மாணவர்களுக்கு வேலைப் பயிற்சியை அளிக்க அனுமதிக்கின்றன. அப்ரன்டிஸ் சட்டம் 1961-ன்படி, முப்பதுக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ள ஓர் அலுவலகத்தில் 2.5% பேர் பயிற்சி மாணவர்களாக இருக்கலாம். அந்த வகையில், அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே ஒவ்வோர்ஆண்டும் 1.25 லட்சம் பேருக்கு வேலைக்கான பயிற்சியைத் தர முடியும். ஆனால், வெறும் 41,250 பேருக்கு மட்டுமே வேலைப் பயிற்சி தரப்படுகிறது. அது மட்டுமல்ல, நம் நாட்டில் 26 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்துக்கு ஒரு மாணவன் என்கிற கணக்கில் மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி அளித்தாலே ஆண்டுதோறும் 26 லட்சம் மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிக்க முடியும்’’ என விரிவான வாதங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ‘டீம்லீஸ்’ நிறுவனம்.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு கோடி வேலைவாய்ப்பையாவது உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் நாம், அந்த இலக்கை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறோம். மாணவர்களுக்கு வேலைப் பயிற்சியை அளிப்பதன் மூலமே இந்தப் பிரச்னையை இனி நம்மால் தீர்க்க முடியும். பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகள் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு இப்படி வேலைப் பயிற்சி அளிப்பதன் மூலமே திறமையான பணியாளர்களை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகின்றன.

நம் நாட்டில் மனிதவளம் இல்லை என்பதல்ல பிரச்னை. அபரிமிதமாக இருக்கும் மனிதவளத்தை ஒழுங்குபடுத்தி, அதை நாட்டின் முன்னேற்றத்துக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் பயன்படுத்தத் தேவையான வழிகளைக் கண்டறிந்து, நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்னை. ‘டீம்லீஸ்’ நிறுவனம் தந்துள்ள ஆலோசனையை நாம் சரியாகச் செய்யும்பட்சத்தில், தனிமனித வருமான வளர்ச்சியில் 142-வது இடத்தில் இருக்கும் நம் நாடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 இடங்களுக்குள் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கலாம்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.