மின் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாகவே உள்ளது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
அமெரிக்காவில் மின் கட்டணம் கட்ட முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் கட்டத் தேவையில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
இமாச்சல பிரதேச முதல்வர்
இமாச்சல பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்கள் சமீபத்தில் அம்மாநிலத்தில் உள்ள மின்சார நுகர்வோர் அனைவருக்கும் மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக அம்மாநிலத்தில் மின்சாரம் பயன்படுத்தப்படும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் கட்டணம் கட்ட வேண்டிய தேவையில்லை என்ற நிலை உருவாகி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உபரி மின்சாரம்
இதுகுறித்து இமாச்சல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் மேலும் கூறும்போது, ‘எங்கள் மாநிலம் தற்போது தேவைக்கு அதிகமாக உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது என்றும் மொத்தம் 24,567 மெகாவாட் மின்சாரம் நாங்கள் தயாரித்து வருகிறோம் என்றும் அதில் 11,138 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி மின்சாரம்
2030ஆம் ஆண்டுக்குள் 10,000 மெகாவாட் கூடுதல் மின் ஆற்றலைப் பயன்படுத்த எங்கள் மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று கூறிய முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், அதில் 1,500 முதல் 2,000 மெகாவாட் வரை சூரிய சக்தி மின்சாரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மின் கொள்கைகள்
மேலும் நீர் மின் திட்டங்கள் மட்டுமின்றி சூரிய ஒளி, காற்றாலை மற்றும் ஹைபிரிட் கம் பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்களை உருவாக்குபவர்களை மாநில அரசு ஊக்குவிக்கிறது என்றும் அதற்காக அவ்வப்போது மாநில அரசு தனது மின் கொள்கைகளையும், திட்டங்களையும் மாற்றி வருகிறது என்றும் தெரிவித்தார்.

பவர் ஸ்டேட்
மாநில அரசின் இந்த முயற்சிகள் காரணமாக எங்கள் ஆட்சிக்காலத்தில் 24 நீர்மின் திட்டங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இமாச்சல பிரதேச மாநிலம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று உள்ளதை அடுத்து எங்கள் மாநிலம் ‘பவர் ஸ்டேட்’ என்று அழைக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

125 யூனிட் இலவசம்
முதல்வர் அறிவித்தபடி ஒவ்வொரு மின் நுகர்வோருக்கு 125 யூனிட் மின்சாரம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்த நுகர்வோர் எண்ணிக்கையான 22,59,645 பேரில் 14,62,130 பேர் 125 யூனிட் மட்டுமே பயன்படுத்துவதால் அவர்கள் மின் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

600 ரூபாய் சேமிப்பு
125 யூனிட் மின் நுகர்வோர் இதற்கு முன்பு 600 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது அவர்கள் ஒரு பைசா கூட மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் 14 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோருக்கு மாதம் 600 ரூபாய் சேமிக்க மாநில அரசு உதவி செய்துள்ளது என முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

புதிய துணை மின் நிலையம்
மேலும் 3.29 கோடி செலவில் மண்டியில் உள்ள கல்யார்டு என்ற பகுதியில் 33KV மின் துணை மின் நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
14 Lakh Consumers In Himachal Pradesh To Get Zero Power Bills As 125 Units Declared Free
14 Lakh Consumers In Himachal Pradesh To Get Zero Power Bills As 125 Units Declared Free | இந்த மாநிலத்தில் வாழ்ந்தால் மின்கட்டணமே கட்ட வேண்டாம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!