எல்லாம் பொடிப் பொடியாக்கும்…! எடப்பாடி பழனிசாமி விடுத்த செய்தி.!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  விடுத்துள்ள “விநாயகர் சதுர்த்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி :

“ஞான முதல்வனாம், வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும்.

“வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்” என்ற வாக்கிற்கு இணங்க விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும், வாழ்வை செழிப்பாக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, நம் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.