துணைவேந்தர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தமிழக உயர்கல்வித்துறையில் கடந்த ஐம்பதாண்டுகளில் திராவிட அரசுகளால் அடைந்த வளர்ச்சி குறித்து பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றிய- மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய 2007-இல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு ‘துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்’ மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம்.

ஏனென்றால், இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை; மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை!

ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத் தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை.

அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி! இதனால்தான் எதிர்க்கிறோம்!

கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்கிற காரணத்தால் எதிர்க்கிறோம்! போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம், இந்தத் தமிழ்ச்சமூகம் என்பதால் எதிர்க்கிறோம்! கல்வியால் முன்னேறுகின்ற சமூகம் நாம் என்பதால் எதிர்க்கிறோம்!

பின்னால் வரக்கூடிய தீமைகளை கடந்தகால வரலாறுகளின் அடிப்படையில் எடை போட்டு எதிர்க்கிறோம்! எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும்.

மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்! அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசியக் கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம்! மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதே, அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச்சமூகத்தைக் கட்டமைக்க அதற்காகத்தான் அமைத்திருக்கிறோம்!

‘To develop the scientific temper’ என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அரசியல்சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமை! அந்தக் கடமை எனக்கும் உண்டு! பல்கலைக்கழகத் துணை வேந்தர்களான உங்களுக்கும் உண்டு! கல்வியாளர்களான உங்களுக்கும் உண்டு!

புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள். புதிய புதிய பட்டப்படிப்புகளைக் கொண்டு வாருங்கள். மாணவர் சமுதாயத்துக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ, அதனுள் அவர்களைப் பொருத்திக் கொள்ள அனுமதியுங்கள். புதிய பாதைகள் அமைப்பதாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும். இந்த ஆட்சிக் காலத்தை, உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழ வைப்பது துணைவேந்தர்களாகிய உங்களின் கடமை!

சமத்துவமும் – பகுத்தறிவுச் சிந்தனையும் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதே கல்வியாளர்களான உங்களுக்கு இருக்கக்கூடிய மாபெரும் கடமை, அது உங்களுக்கு வந்துசேரக்கூடிய மாபெரும் பெருமை! பழமைவாத பிற்போக்குக் கருத்துகளைப் புறந்தள்ளி புதிய அறிவியல் கருத்துகளை ஆக்கப்பூர்வமான, வளமான சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்து நாட்டுக்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கும், பெருமை சேருங்கள்! இதனை நீங்கள் உளமார நிறைவேற்றிக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.