சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில், மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் கலந்துரையாடினார்.
அவர் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள 8,700 மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 மருந்துகள், 250 அறுவை சிகிச்சை
உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.5,000 கோடி அளவுக்கு பொதுமக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை சார்பில், அதிக தேவையுள்ள மருந்துகளை இதில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.