இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், “வெள்ளம் ஒரு பெரிய கடல் போல பரவி இருப்பதாகவும் ,வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு கூட வறண்ட நிலம் இல்லை.
பல மாவட்டங்கள் கடலின் ஒரு பகுதியாகத் தோன்றத் தொடங்கியுள்ளன.எங்கள் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க வசதியாக, ரேஷன் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே கொண்டு சேர்க்க வறண்ட நிலத்தை கண்டுபிடிக்கவில்லை” என ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளார்.
சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் இதுவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசமான இயற்கை சீற்றம் குறித்து, ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆராய்ச்சி இயக்குநரும், ஐபிசிசி அறிக்கையின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவருமான அஞ்சலி பிரகாஷ் கூறியதாவது:-
“மிக வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகளில், வெப்பமயமாதலின் தாக்கம், நாம் முன்பு நினைத்ததை விட மிக வேகமாக உள்ளது.ஒவ்வொரு முறையும் தெற்காசியாவில் ஒரு புதிய முன்னுதாரணமாக இயற்கை சீற்றம் உருவாகி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் உண்டான அதிக வெப்பநிலை, பெருங்கடல்களை வெப்பமாக்கியது. இதன் காரணமாக, இமயமலையில் உள்ள சிந்து நதி அமைப்புகளில் பனிப்பாறை உருகி நீரோட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு மேலோங்கியுள்ளது. சிந்து நதி பாயும் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.