வாஷிங்டன்:பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் மீது, இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடுத்துள்ளார்.
பணப்பரிமாற்றம்
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் லோகேஷ் வய்யுரு. இவர் இரைப்பை குடல் நிபுணராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதன் விபரம்: இந்திய பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பேராசிரியர் க்ளாஸ் ஷ்வாப் ஆகியோர் தங்கள் நாடுகளில் பெரும் ஊழல்கள் செய்து, அதன் வாயிலாக ஈட்டிய கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை அமெரிக்காவுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.
மேலும், ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயிலாக அரசியல் எதிரிகளை உளவு பார்த்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.கடந்த மே 24ல் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஜூலை 22ல் நீதிமன்றம் ‘சம்மன்’ அனுப்பியது. இந்த சம்மன் ஆக., 4ல் இந்தியாவில் அளிக்கப்பட்டது. சம்மன் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை, ஆக., 19ல் டாக்டர் லோகேஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஓய்வு நேரம்
இந்நிலையில், இந்த வழக்கிற்கு எதிராக ஆஜரான நியூயார்க் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ரவி பாத்ரா வாதிட்டதாவது:அமெரிக்காவில் வசிக்கும் ஆந்திராவை சேர்ந்த டாக்டரான லோகேஷுக்கு நிறைய ஓய்வு நேரம் உள்ளது. அதை எப்படி கழிப்பது என்று தெரியாமல் இப்படியொரு அபத்தமான மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் ஆதாரமாக எந்தவித ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. நீதிமன்றத்தில் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவை இழிவுபடுத்த, அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இந்த மனு சார்பாக ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை. அதில் இருந்தே இதன் நம்பகத்தன்மையை அறிய முடியும்.இது போல ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதைப் போல இந்த மனுவையும் நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement