சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையின் குறுக்கே கயிறு கட்டி அப்பகுதியினர் வெளியேறி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் படகுகளின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும், 4 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியினர் கால்நடைகளை பாதுகாப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் கரையிலேயே தங்கியுள்ளனர்.
அப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு, குடிநீர், மருத்துவம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ள நீரின் அளவு படிப்படியாக உயர்வதால் தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் உட்புற சாலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகரிப்பதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தற்போது சாலையின் குறுக்கே கயிறுகளை கட்டி வெளியேறி வருகின்றனர்.