கோட்வார்,: உத்தரகண்டில், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் அச்சமடைந்த கிராமத்தினர், ஊரையே காலி செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டத்தில் உள்ள துகாடா மற்றும் பொக்ரா கிராமங்களில் நுாற்றுக்கணக்கானோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து இந்த கிராமங்களுக்குள் நுழையும் சிறுத்தைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கொன்று வந்தன.
சமீபத்தில், வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை சிறுத்தை துாக்கிச் சென்று கடித்துக் குதறியதில் சிறுமி உயிரிழந்தாள். சிறுத்தைகளின் தாக்குதலை தடுக்க வேண்டும் என கிராமத்தினர் பலமுறை முறையிட்டும் பலனில்லை.
வனத்துறையினரோ ஒலிபெருக்கிகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கிராமத்தினர் தங்கள் மூதாதையர் வாழ்ந்த வீடுகள், வயல் வெளிகள், நிலங்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு அருகில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால், அந்த கிராமங்கள் இப்போது ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தப் பகுதிகளில், வனத்துறையினருடன் இணைந்து ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். விரைவில், சிறுத்தைகள் நடமாட்டத்தை ஒழிப்போம். கிராம மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டவுடன் அவர்கள் மீண்டும் திரும்புவர்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement