மீத்தேன் திட்டத்தை எதிர்த்த, நம்மாழ்வார் நெஞ்சுக்கு நெருக்கமான லெனின்; இயற்கையுடன் இணைந்தார்!

டெல்டாவில் அழிவை விளைவிக்கக் கூடிய திட்டங்களான மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து அழுத்தமான போராட்டங்களை நடத்திய பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனரான விவசாயி லெனின், இன்று காலை இயற்கையுடன் இணைந்த சம்பவம், விவசாயிகள் உள்ளிட்ட பலரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

நம்மாழ்வார் உடன் லெனின்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனர். இதன் மூலம் டெல்டாவை அழிக்கக்கூடிய திட்டமான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அழுத்தமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர்.

நினைவில் வாழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவருடன் கரம் கோர்த்து செயல்பட்டவர். இறுதி வரை களத்தில் அனல் பறக்க போராடிய லெனின் அம்மை தாக்குதலில் ஏற்பட்ட உடல்நல குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் இயற்கை விவசாயிகள், டெல்டாவைக் காக்கும் போராளிகள் மற்றும் விவசாய அமைப்புகள் எனப் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லெனின் உடல் அவரது சொந்த ஊரான பிச்சினிக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்போது லெனின் உறவினர்கள் பலர், நம்மாழ்வார் இருக்குற இடத்துக்கே போயிட்டீங்களேனு கண்ணீர் வடித்தனர்.

மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து!

லெனினுடன் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தில் இணைந்து போராட்டக்களத்தில் பங்காற்றிய மண் மீது ஆர்வம் கொண்ட வழக்கறிஞர் நல்லதுரை என்பவர், லெனின் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“மீத்தேன் திட்ட அறிவிப்பு, பசுமை பூமியான டெல்டாவை அழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாக விவசாய அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருந்த சமயம் அது. எல்லோரும் மீத்தேனுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

2011-ல் மீத்தேனுக்கு எதிரான போரட்டத்துக்கு பொது அமைப்பு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரையும் திரட்டி லெனின் தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது மீத்தேனுக்கு எதிரான தீவிரமான போராட்டக் குணத்தை லெனின் கொண்டிருப்பது அனைவரையும் உணர வைத்தது. அது தொடர்பாக நடைபெற்ற இரண்டாவது கூட்டத்துக்கு அய்யா நம்மாழ்வாரை அழைத்து வந்தார் லெனின்.

விவசாயிகள் நலனுக்காகப் போராடிய லெனின்

இயற்கையையும் இனத்தையும் அழிக்க வந்திருக்கும் பேராபத்து திட்டம் மீத்தேன். எனவே, இந்த அமைப்புக்கு, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்றார் நம்மாழ்வார். அதே போல் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் எனப் பெயர் வைக்கப்பட்டதுடன், அதன் நிறுவன தலைவராக இருந்து செயலாற்றி நம்மாழ்வாரை நேரடி போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தவர் லெனின்.

அதன் பிறகு நம்மாழ்வார் டெல்டாவில் ஓ.என்.ஜி.சி மற்றும் தி கிரேட் ஈஸ்டர் எனர்ஜி நிறுவனம் (ஜி.சி.இ.எல்) உள்ளிட்டவைக்கு எதிராக அனலாக நடைப்பயணம் மேற்கொண்டு போராட்டங்களை நடத்தினார். பின்னணியில் நம்மாழ்வாரின் முழு வீச்சாக இருந்தவர் லெனின் என்றால் மிகையாகாது. விவசாய நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை உடைத்தெறிந்தார் நம்மாழ்வார். ஒவ்வொரு நாளும் போராட்டம் தீவிரமடைந்தது.

‘மீத்தேன் தடை… தேர்தல் நாடகமே!’

வெறுமனே போராட்டங்கள் நடத்தி வந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கே நேரடியாகச் சென்று போராடும் நிலை ஏற்பட்டதற்கும், அணையாமல் தொடர்வதற்கும் முதல் காரணமாக அமைந்தவர் லெனின். மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டதற்கு லெனின் எடுத்த தீவிரமான போராட்ட முன்னெடுப்பே காரணம் எனப் போராட்டக்காரர்களால் பேசப்பட்டதும் லெனின் குறித்த முத்தாய்ப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

லெனின், நேர்மையான போராட்டக்காரர். சுய நலமில்லாமல் அவர் போல் அனைவரும் போராட முன் வர வேண்டும் எனப் பல கூட்டங்களில் மேடையிலேயே லெனின் குறித்து நம்மாழ்வார் பேசியிருக்கிறார். நம்மாழ்வார் கொள்கைகளை மட்டும் இறுகப் பற்றவில்லை. அதை இறுதிவரை பின்பற்றியவர் லெனின்.

பல ஆண்டுகளுக்கு முன்பே லெனின் தன் மகன் ஏங்கல்ஸை இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரிடம் அனுபவ கல்விக் கற்க அனுப்பி வைத்தார்.

நம்மாழ்வார் உயிர் பிரிந்த சமயத்தில் லெனினின் வீட்டில்தான் தங்கியிருந்தார். உடல் நல குறைபாட்டால் போராட்டக் களத்துக்கு செல்ல முடியாமல் இருந்த நிலையில் தன் சார்பாக லெனினை அனுப்பி வைத்தார் நம்மாழ்வார். அவருடைய நெஞ்சுக்கு நெருக்கமாக லெனின் இருந்ததே அதற்குக் காரணம்.

நம்மாழ்வார், லெனின்

போராட்டம் முடித்து லெனின் திரும்பி வந்தபோது நம்மாழ்வார் உயிரிழந்துவிட்டார். `அவரது உடல் மண்ணில் இல்லாமல் போகலாம். ஆனால் அவரது ஆவியும், அவர் விதைத்த உணர்வுகளும் என்னுடன் இருக்கின்றது. அவர் வழியில் இறுதி வரை போராடுவேன்’ எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்த லெனின் நம்மாழ்வார் மறைவுக்குப் பிறகும் பல போராட்டங்களை நடத்தினார். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்துக்காக ஒத்த பைசாகூட யார்கிட்டேயும் வசூல் செஞ்சதில்ல. தன் சொந்த பணத்திலேயே போராட்டங்களை நடத்தியவர்.

கடந்த ஆண்டு வரை நம்மாழ்வாருக்காக நினைவேந்தல் கூட்டம் நடத்தி அவர் மீது கொண்டபற்றை வெளிப்படுத்தினார். நம்மாழ்வாரைப் போலவே உடலைக் காக்க இயற்கை மருத்துவத்தை மட்டுமே செய்துகொண்டவர். மண்ணுக்கு ஆபத்து என்றால் முன்னுக்கு நிற்கும் அவர் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். நம்மாழ்வார் சென்ற இடத்துக்கு லெனினும் சென்று விட்டார். அவர் நடத்திய போராட்டங்கள் எங்களுக்கு தடமாக மாறியிருக்கிறது.

நம்மாழ்வார்

அதைப் பின்பற்றி மக்கள் அனைவரும் பேராபத்தை விளைவிக்கக்கூடிய திட்டங்களுக்கு எதிராக எப்போதும் விழிப்பாக இருந்து போராடுவார்கள். முன்னத்தி ஏராக நம்மாழ்வாரை பின் தொடர்ந்த லெனின் தன் மண்ணுக்கான உழைப்பை நிறுத்திக் கொண்டது தாங்க முடியாத பேரிழப்பு” என்று கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே கூறி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.