ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மூழ்கியது: உத்தமர்சீலி தரைப்பாலத்தில் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் தற்போது காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனுடன் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வருகிறது.

காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடியும், காவிரியில் 62 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டது.

இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் படித்துறையை மூழ்கடித்தபடி காவிரி ஆற்றில் நீர் செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது.

திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் கும்பகோணத்தான் சாலையில் உத்தமர்சீலி-கவுத்தரசநல்லூர் இடையே காவிரி ஆற்று வெள்ளம் கரைபுரண்டு கும்பகோணத்தான் சாலையை கடந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் பாய்கிறது.

சுமார் 2 கி. மீ. நீளத்திற்கு காவிரி ஆறு சாலையில் பாய்ந்து கொள்ளிடத்திற்கு செல்கிறது. உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர் மற்றும் அதனையொட்டி உள்ள சில கிராமங்களின் வயல்வெளிகளில் வெள்ளம் பாய்கிறது.

சுமார் 200 ஏக்கர் வாழைப்பயிர்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அந்த சாலை வழியாக காலையில் வாகனங்கள் சென்றன. பிற்பகலில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

காவிரியில் அளவுக்கு அதிகமான வெள்ளம் வந்து கல்லணையை பாதித்து விடக்கூடாது என்பதற்காக உத்தமர்சீலிக்கும், கவுத்தரசநல்லூருக்கும் இடையிலான கும்பகோணத்தான் சாலை தாழ்வாக சுமார் 4 கி. மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் இந்த தாழ்வான சாலை வழியாக பாய்ந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் வகையில் இந்த சாலை தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உத்தமர்சீலி பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்குள்ள பள்ளி மாணவ மாணவியர், கல்லூரி மாணவர்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.