மதுரை: ரூ.380 கோடியில் அமைந்த நான்கு வழிச்சாலை மதுரை வைகை கரையில் இரு புறமும் முழுமையாக போடப்படாததால் தற்போது பயன்பாடில்லாமல் அருகில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வருவோர் கார்களை நிறுத்தும் ‘பார்க்கிங்’ ஆக மாறியுள்ளது.
மதுரை நகர் பகுதியில் அதிகமாகும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்குப் பார்வையில் வைகை கரையின் இருபுறமும் ரூ.380 கோடியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி இணைந்து 50 அடி அகலத்திற்கு பிரமாண்டமான நான்கு வழிச்சாலை அமைத்துள்ளது. இந்த சாலை முழுமையாக அமைந்தால் நகர் பகுதியில் வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த சாலை போடுவதற்காக ஆங்காங்கே சில இடங்களில் நிலம் ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டப்படி வைகை தென் கரை ராஜா மில் சாலை பகுதி, பெத்தானியாபுரம் பகுதியில் முழுமையாக போடப்படவில்லை. வடகரையில் விளாங்குடி முதல் தத்தனேரி வரை சாலை போட்டுள்ளனர். ஆனால், இந்த சாலையும் முழுமையடையவில்லை. அதனால், இந்த சாலைகளில் வரும் வாகனங்கள் தொடர்ச்சியாக வர முடியாமல் மீண்டும் நகர சாலைகளில் வந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
அதனால், சில இடங்களில் வைகை கரை நான்கு வழிச்சாலை பயன்பாடில்லாமல் உள்ளன. அதனால், இந்த சாலைகள் அருகே உள்ள முக்கிய வீதிகள், சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஷாப்பிங் வருவோர், வியாபார ரீதியாக வந்து செல்வோர் தங்கள் கார்களை பயன்பாடில்லாத இந்த நான்கு வழிச்சாலைகளில் ‘பார்க்கிங்’ செய்து செல்கின்றனர். பல மணி நேரம் கார்களை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து அவர்கள் எடுத்து செல்கின்றனர். இந்த சாலை பயன்பாடில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாததால் போக்குவரத்து போலீஸார், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடக்கும் இந்த ‘பார்க்கிங்’-கை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதற்கு முன் ஏவி மேம்பாலம் அருகே ஒரு தனியார் நிறுவனம் இதேபோல், வைகை கரையை மேம்படுத்தி அதை தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கார்களை நிறுத்த பயன்படுத்த ஆரம்பித்தது.
அதற்கு ஆரம்பத்திலேயே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் வைகை கரை தப்பியது. தற்போது அங்கு எந்த வாகனங்களும் பார்க்கிங் செய்யப்படுவதில்லை. அதனால், தற்போது மழைக்காலம் என்பதால் வைகை ஆற்றின் மேட்டுப்பகுதியில் போடப்பட்ட இந்த வைகை கரை நான்கு வழிச்சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக உள்ளது. குறிப்பாக வைகை தென்கரை நான்கு வழிச்சாலையில் முனிச்சாலையை ஓட்டிய வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வருவோர் தங்கள் கார்களை அங்கு பார்க்கிங் செய்கின்றனர். அதனால், அப்பகுதி வைகை கரை தரைப் பாலத்தில் இருந்து வைகை கரை சாலையில் 2 கி.மீ., தொலைவிற்கு தினமும் கார்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது.
முழுமையாக போடப்படாத வைகை கரை நான்கு வழிச்சாலைகள் நிரந்தரமாக இப்படி ‘பார்க்கிங்’ ஆக மாறுவதற்கு முன் போக்குவரத்து போலீஸார், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இந்த சாலையை இதுபோல் ஆங்காங்கே பயன்பாடில்லாமல் இருப்பதற்கு இந்த சாலை முழுமையாக போடாமல் இருப்பதே காரணம். அதனால் சாலை போட முடியாமல் இருப்பதற்கான காரணங்களை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை இணைந்து ஆய்வு செய்து விரைவாக மக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயன்பாடுள்ள வைகை கரை நான்கு வழிச்சாலைகளை போட வேண்டும்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘விடுபட்ட இடங்களில் இணைப்பு சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சாலையில் அத்துமீறி பார்க்கிங் செய்வது தடுக்கப்படும்” என்றார்.