பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், நகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில், பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் தமிழக கலாச் சாரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் போற்றும் வகையில், வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் 18-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை கட்டுமான கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரமும், பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 39 ஆயிரமும், பொது இடங்களில் விதிமீறி சுவரொட்டியை ஒட்டிய 211 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97 அபராதமும் என மொத்தம் ரூ.15 லட்சத்து 63 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மட்டும், பொது இடங்களில் குப்பை கொட்டியதாக அதிக பட்சமாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 500-ம், அண்ணா நகரில் ரூ.1 லட்சத்து 800-ம், பெருங்குடியில் ரூ.91,500-ம் வசூலிக்கப்பட்டன. கட்டுமான கழிவுகளை கொட்டிய வகையில் கோடம்பாக்கத்தில் ரூ.75 ஆயிரமும், அண்ணா நகரில் ரூ.60 ஆயிரமும், அம்பத்தூரில் ரூ.54 ஆயிரம் அதிகபட்சமாக அபராதம் வசூலிக்கப்பட்டன. சென்னை மாநகரை தூய்மையாக வைக்க பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.