சென்னை : நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்துடன் மோதும் வகையில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது திருச்சிற்றம்பலம் படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவோடு ஓடி வருகிறது.

திருச்சிற்றம்பலம் படம்
முன்னதாக ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி கிரே மேன் என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி அவரது கேரக்டரும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

நித்யா மேனன் நடிப்பு
தனுஷுடன் இணைந்து நடித்த நித்யா மேனன் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள நிலையில் படத்தின் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட கேரக்டர்களும் அவரவர் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளனர்.

நானே வருவேன் படம்
இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் செப்ம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் ரிலீஸ் அப்டேட்
அன்றைய தினம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் சர்வதேச அளவில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் ரிலீசாக உள்ள நிலையில், தனுஷின் படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

7ம் தேதி வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள்
இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 7ம் தேதி மாலை 4.40 மணிக்கு வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். நெஞ்சத்தை வருட வரும் இசை என்றும் அவர் கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பான கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.