புதுச்சேரி: நாடு முழுவதும் கடந்த 31ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நேற்று மாலை நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், ஏடிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கவர்னர் தமிழிசை கூறியதாவது:
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தெற்கு மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் பலவும் விவாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, விமான நிலைய விரிவாக்கத்திற்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வந்திருந்ததால், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 375 ஏக்கர் நிலத்தை பெறுவது, புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கும் பலன்தரும் என்ற தகவலை விவரித்து இருக்கிறோம். புதுவையில் எந்த வளர்ச்சி ஏற்பட்டாலும், அது தமிழகத்திற்கும் பலன் தருவதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 2,47,000 புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 1,74,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நம்மால் தமிழகத்திற்கும் சேவை செய்ய முடிகிறது என்பதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில், விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவி செய்தால் 2 மாநிலங்களும் பயன்பெறும்.
ஆன்மிக சுற்றுலா, மருத்துவச் சுற்றுலாவுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் நமக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதால் வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம். தென் மாநிலங்கள் கூட்டம் என்பது மிகப்பெரிய வாய்ப்பு. எல்லா முதல்வர்களும், துணைநிலை ஆளுநர்களும் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறார்கள். ஆளுநர் பங்கேற்றது பற்றி எல்லோரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஏனென்றால் ஆளுநர் புதுச்சேரிக்காக பேசியிருக்கிறார். நமது மாநிலத்திற்காக பேசினால், ஏன் சென்றார்கள் என்று கேட்பது சரியல்ல. அதுமட்டுமின்றி புதுச்சேரி பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்துக் கொண்டு 9 கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.
நிதிநிலைமையை மேம்படுத்தி தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அதிகாரிகளும் இருந்தார்கள், உள்துறை அமைச்சர் இருந்தார் என்பதால் நேர்மறை விவாதங்களுக்கு வழி வகுத்தது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் பெயரளவுக்கு நடந்து கொண்டிருந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக மட்டுமல்லாமல் அனுபவப்பூர்வமாக, பயன்தரும் அளவில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்கும் அளவுக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கவர்னர் கூறினார்.