மதுரை: மதுரையில் தற்போது பெய்யும் மழையால் முக்கிய சாலைகள் முதல் குடியிருப்பு சாலைகளை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தவே முடியாத படி தண்ணீரில் தத்தளித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 13 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,545 கி.மீ., மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இதில், 265 கி.மீ., சாலைகள் பஸ்கள், கனரக வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. 1,253 கி.மீ., சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளன. இதில், 75 சதவீதம் மாநகராட்சியின் பிரதான சாலைகள், முதல் குடியிருப்பு சாலைகள் மோசமாக உள்ளன. இந்த சாலைகள் குண்டும், குழியுமான நிலையை கடந்து தற்போது போக்குவரத்திற்கே பயன்படுத்த முடியாமல் உருகுலைந்து காணப்படுகிறது.
தற்போது மாநராட்சி போதிய வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால், மாநகராட்சியால் சாலை, சுகாதாரப்பணி, குடிநீர் கட்டமைப்பு பணிகளை கூட செய்ய முடியவில்லை. தற்போது மழை பெய்வதால் இந்த சாலைகள் அனைத்தும் தண்ணீர் தேங்கி நிற்பதோடு சேறும், சகதியுமாக உள்ளன.
பெரும்பாலான சாலைகளில் மழை தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளன. இரு சக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரில் தத்தளித்தப்படியே தினமும் இந்த சாலைகளில் அபாயகரமாக சாகச பணயம் செய்கின்றனர். தற்போது பெய்யும் மழைக்கும் தண்ணீர் தேங்கிய சாலையில் திடீர் பள்ளங்களும், சில இடங்களில் சாலை முற்றிலும் மழைக்கு கீழே உள்வாங்கி இருக்கலாம். ஆனால், அந்த ஆபத்தையும் கடந்தே மதுரை நகர வாசிகள் இந்த சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் பள்ளங்களில் இரு சக்கர வாகனங்ளோடு விழுந்து காயமடைகின்றனர். அன்றாடம் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்ல வேண்டி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்த சாலைகளை கடந்துதான் அலுவலங்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது.
குறிப்பாக மதுரை குருவிக்காரன் சாலை சந்திப்பில் அண்ணா நகரில் இருந்து மதிச்சியம், ஆழ்வார்புரம் செல்லும் சாலையில் கடந்த 2 ஆண்டாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதும், கோடை காலத்தில் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
இந்த பகுதியில் வைகை கரை நான்கு வழிச்சாலை போடாததால் வாகன ஓட்டிகள், இந்த மோசமான மழை தண்ணீர் தேங்கி நிற்கும் சாலை வழியாக தான் காமராஜர் சாலை, முனிச்சாலை, கே.கே.நகர், அண்ணா நகர், விரகனூர் சந்திப்பில் இருந்து வருகிறவர்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது.
அனைவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்களுடன் புகுந்து செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை பயன்படுத்தி பாழாய் போய் கிடக்கும் இந்த சாலைகளை பராமரிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.