வாணியம்பாடி: வேலை செய்யும் இடத்தில் டிரக்கிங் சென்றபோது தென்கொரியா இளம்பெண்ணை காதலித்த தமிழக வாலிபர், வாணியம்பாடியில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்தவர் பிரவீன்குமார்(33). இவர் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து, மேற்படிப்புக்காக தென் கொரியா சென்றார். அங்கு டாக்டர் பட்டம் பெற்ற பிரவீன்குமார், தற்போது அங்கேயே ஒரு தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
பிரவீன்குமாருக்கு மலை ஏறுவது (டிரக்கிங்), சைக்கிளிங் போன்றவை பிடிக்கும். இதேபோல் டிரக்கிங், சைக்கிளிங்கில் ஆர்வமுள்ள தென்கொரியா நாட்டில் உள்ள பூசான் மாகாணத்தை சே ர்ந்த மெழுகு ஓவியரான சேங்வான்முன்(30) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து காதல் குறித்து பெற்றோருக்கு தெரிவித்து, இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, தென்கொரியாவை சேர்ந்த சேங்வான்முன் குடும்பத்தினர் கடந்த வாரம் இந்தியா வந்தனர்.
தொடர்ந்து நேற்று வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பிரவீன்குமார்- சேவான்முன் திருமணம் சிறப்பாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக தமிழில் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.