நெல்லை: சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமமாக நடத்துவதாக நெல்லையில் நடந்த விழாவில் முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்தார். நெல்லையில் நடந்த நலத்திட்ட விழாவில் நெல்லை தொகுதி எம்எல்ஏவும், பாஜ மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
நெல்லை மாவட்டத்தில் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நானும் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறேன்.
சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அவர், சமமாக நடத்துகிறார். எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி என்று பாராமல் திட்டங்களை அள்ளித் தருகிறார். குறிப்பாக எனது நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு மானூரில் அரசு கலைக்கல்லூரியை தந்து பெருமைப்படுத்தி உள்ளார். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். முதல்வர் அடிக்கடி நெல்லை வந்து அதிக நலத்திட்டங்களை தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.