நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்த்துக்கொள்வதால் சாதிக்க போவது ஒன்றுமில்லை; மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

திருச்சி: நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்த்துக்கொள்ளும் வேலையில் மாணவர்கள்  ஈடுபடக்கூடாது. அதனால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கினார். திருவெறும்பூர் தொகுதியில் உள்ள தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்னைகள் குறித்து கலெக்டர் பிரதீப்குமாருடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நீட் ேதர்வில் கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைய கொரோனாவும் ஒரு காரணம். திமுகவை பொறுத்தவரை, நீட் வரவே கூடாது என்பது தான் நிலைப்பாடு. அதற்கான சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாலும், அதுவரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

மாணவ செல்வங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அந்தந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டு மையங்களில் சென்று கவுன்சலிங் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்த்துக்கொள்ளும் வேலையில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது. அதனால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. பெற்றவர்களையும், சமூகத்தையும் கவலையில் ஆழ்த்திவிட்டு தான் செல்கிறீர்கள். தயவுசெய்து அதுபோன்ற தவறான முடிவை எடுக்க வேண்டாம். கட்சி வேறுபாடின்றி நீட் விலக்கு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி வரை கொண்டு சென்றுள்ளோம். ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடமும், முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்குக்கேட்டு வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்திலும் வலியறுத்தி வருகிறோம். நல்லத் தீர்வு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.