நடிகர்கள்: ஆர்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன்
இசை: டி. இமான்
இயக்கம்: சக்தி செளந்தர்ராஜன்
சென்னை: ஏலியன் முதல் அர்னால்டின் பிரேட்டர் வரை வருஷத்துக்கு ஒரு கிரியேச்சர் படம் புதுசு புதுசா ஹாலிவுட்டில் வந்துக் கொண்டு தான் இருக்கிறது.
வேற்றுக் கிரக படங்கள் முதற்கொண்டு எதிர்காலத்தில் நம் உலகையும் ஏலியன்கள் தான் ஆளப் போகிறது என பல படங்கள் வந்து விட்டன.
இப்படி ஹாலிவுட் படங்களின் மேல் பிரியம் கொண்ட இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் முன்னதாக வெளியான மிருதன், டிக்டிக்டிக், டெடி உள்ளிட்ட படங்கள் கைகொடுத்ததை போல இந்த கேப்டன் படமும் கை கொடுத்ததா என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
கேப்டன் படத்தின் கதை
எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் கேப்டன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) டீம் அதை முறியடித்து விடும். அப்படிப்பட்ட டீமுக்கு செக்டர் 42ல் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், அங்கே போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை என்பது தான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறிய செல்லும் ஆர்யாவின் டீம் minotaur எனும் ஒரு வகையான பிரேட்டரிடம் சிக்கிய நிலையில் தப்பித்ததா? இல்லையா? அந்த உயிரினம் அங்கு வர என்ன காரணம் என்பது தான் கேப்டன் படத்தின் கதை.

ஓவர் நம்பிக்கை
முந்தைய படங்களில் சிஜி சொதப்பல்கள் இருந்தாலும், திரைக்கதை மற்றும் எமோஷன் கனெக்ட் இருந்த நிலையில், ஹிட் அடித்தது. ஆனால், அந்த நம்பிக்கையை கொஞ்சம் ஓவராக பயன்படுத்திக் கொண்டாரோ இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் என்று தான் தோன்றுகிறது. டிக் டிக் டிக் படத்தில் கிராவிட்டி கதையும் காட்சிகளும் இருந்தாலும், அந்த அப்பா மகன் சென்டிமென்ட் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், இங்கே அப்படியொரு ஆடியன்ஸின் நெஞ்சை தொடும் காட்சிகளை வைக்க இயக்குநர் தவறிவிட்டார்.

ஓட்டை படகை ஓட்டும் ஆர்யா
வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிரட்டல் ராணுவ அதிகாரியாக கம்பீரமாக நடித்துள்ளார் ஆர்யா. ஹீரோக்கள் பெரிய பெரிய துப்பாக்கிகள், பீரங்கிகள் வரை எடுத்துச் சுடும் நிலையில், நாம டேங்கரையே தூக்கிட்டு வந்து ஏலியன்களை சுட்டு வீழ்த்துவோம் என ஆர்யா அதிரடி காட்டியுள்ளார். ஆக்டபஸ் போல ஏரியில் இருக்கும் அந்த ராணி மினோட்டரிடம் மாட்டிக் கொண்டு அதை கொன்று குவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தாலும், ஓட்டை படகை ஒரே ஆளாக ஓட்டும் கேப்டனாகவே மாறி உள்ளார் ஆர்யா.
நெகட்டிவ் ஷேடில் சிம்ரன்
சீமராஜா படத்தில் வில்லியாக நடித்த சிம்ரன், அந்தகன் படத்திலும் வில்லியாக மிரட்ட உள்ளார். இந்நிலையில், இந்த படத்திலும் அவருக்கு நெகட்டிவ் ஷேட் ரோல் தான். அவரது போர்ஷனில் அந்த ஃபேக்டரிக்கு ‘NOC’ வாங்க ஏன் போராடுகிறார். அங்கே நடக்கும் அரசியல் கதையை அழுத்தமாக வைத்திருந்தால் படம் தப்பித்து இருக்கும்.

பிளஸ்
தமிழில் இப்படியொரு ஏலியன் அல்லது பிரேடட்டர் படங்கள் வரவில்லை. அதற்காக போய் பார்க்கிறேன் என்பவர்கள் தாராளமாக போய் பார்க்கலாம். இமானின் பிஜிஎம் மட்டுமே படத்திற்கு பெரிய பிளஸ் என்று சொல்லலாம். ஐஸ்வர்யா லக்ஷ்மி கொஞ்ச சீன் வந்தாலும் அழகாக நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் ஆர்யாவின் நடிப்பு. மற்றபடி எதுவும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.

மைனஸ்
அந்த கிரியேச்சரின் சிஜி ரொம்பவே மோசம், டெடி படத்தில் கடைசி வரை அந்த டெடி பொம்மையை அழகாக பயன்படுத்தி இருப்பார் இயக்குநர். அதே போல கிரியேச்சர்கள் கடித்துக் கொல்வது போல பயமுறுத்தும் விதமாக உருவாக்கி இருக்கலாம். ஆனால், விஷ எச்சிலை துப்பியே கொல்கிறது. சிம்ரனை வைத்து ட்விஸ்ட் செய்யலாம் என்று பார்த்தாலும் அவர் காஸ்டிங்கே காட்டி கொடுத்து விடுகிறது. மொத்தத்தில் ஆர்யாவின் கேப்டன் கரை சேருவது கஷ்டம்.