தமிழ்நாட்டில்ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இது இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியமும் தொடரும். 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதத்துக்கு ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.155 கூடுதலாகச் செலுத்த வேண்டும். 400 யூனிட்கள் வரை இரண்டு மாதங்களுக்கு ரூ.295 கூடுதலாகச் செலுத்த வேண்டும். மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு ரூ.595 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
மேலும், மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள், சிறு, குறுந் தொழில் துறையினர் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மின் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தி இருப்பதற்கு, அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பெயரளவுக்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களுக்கு `ஷாக்’ கொடுத்து இருப்பதாகவும், உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் கருத்தை கேட்ட பின்னரே, மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை விளக்கமளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு இந்த கட்டண திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை விளக்கமளித்துள்ளது.