கொரோனா காரணமாக மூடப்பட்ட ஆரோவில் மாத்ரி மந்திர் தியான மையத்தை, வாரத்தில் ஒரு நாள் மட்டும் பார்வையிட அனுமதி வழங்குவதால், எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் உருண்டை வடிவிலான மாத்ரி மந்திர் தியான மையம் உள்ளது. இம்மையத்தைப் பார்வையிட தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக தியான மையம் கடந்தாண்டு மூடப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன், விசிட்டர் சென்டர், ஓட்டல்கள் திறந்து வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.ஆனால், மாத்ரி மந்திர் தியான மையத்திற்குள் சுற்றுலா பயணிகளை வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமை மட்டுமே அனுமதிக்கின்றனர்.
குறிப்பாக வி.ஐ.பி., – வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் ஆன்லைன் மூலம் முன் அனுமதி பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் சனிக்கிழமையன்று அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற 6 நாட்களுக்கும், யாரையும் அனுமதிப்பதில்லை.ஆரோவில் நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தெரியாமல், எஞ்சிய நாட்களில் வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள், தியான மையத்திற்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.எனவே, ஆரோவில் நிர்வாகம், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, விரைந்து மாத்ரி மந்திர் தியான மையத்தை பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement