மும்பை: பாலிவுட் பிரபலங்கள் இனி பாய்காட் கேங்கிற்கு பயப்படாமல் தங்கள் ரசிகர்களை கவரும் விதமாக நல்ல படங்களை எடுக்க முன் வந்தாலே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தலாம் என்பதற்கு சாட்சியாக மாறிவிட்டது பிரம்மாஸ்திரம் திரைப்படம்.
மார்வெல் படங்களுக்கு இணையான விஷுவல் எஃபெக்ட்ஸ் உடன் புராண கதைகளில் வரும் சக்திகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாஸ்திரம் படத்தை பார்க்க தியேட்டரில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
பாலிவுட் பாய்காட் கேங் எவ்வளவு முயற்சி செய்தும் படத்தின் ஓட்டத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தரண் ஆதர்ஷுக்கு பதிலடி
பாலிவுட்டின் ப்ளூ சட்டை மாறன் போல பிரம்மாஸ்திரம் படத்தை பார்த்து விட்டு பெரிய ஏமாற்றம் என விமர்சித்த தரண் ஆதர்ஷே தற்போது பிரம்மாஸ்திரம் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ளது என்கிற ட்வீட்டை போடும் அளவுக்கு சரியான பதிலடியை அயன் முகர்ஜியின் பிரம்மாஸ்திரம் கொடுத்துள்ளது. பாலிவுட்டையே இந்த படம் தான் காப்பாற்றும் என நினைத்த நிலையில், அதை தவறாமல் செய்திருக்கிறது பிரம்மாஸ்திரம்.

மெளனி ராய் கொண்டாட்டம்
பிரம்மாஸ்திரம் படத்தில் வில்லி ஜுனூன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மெளனி ராய் படம் பெரிய வெற்றி பெற்றதை அறிந்ததுமே தனது படக்குழுவுடன் கொண்டாடி வருகிறார். ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே சந்தோஷமடைந்துள்ளனர்.

ஹாட்ரிக் அடித்த ஆலியா பட்
ஆலியா பட் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கங்குபாய் கத்தியவாடி, ஆர்ஆர்ஆர் படங்களை தொடர்ந்து அவர் தனது கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரம் படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தொடர்ந்து 3 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில், எல்லாம் ஆலியா பட் ராசி தான் என திரையுலகம் அவரை கொண்டாடி வருகிறது.

160 கோடி
முதல் நாளில் உலகளவில் 75 கோடி வசூல் செய்த பிரம்மாஸ்திரம் திரைப்படம் சனிக்கிழமையான நேற்று 85 கோடி வசூல் செய்து இரண்டு நாட்களில் 160 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக பிரம்மாஸ்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிம்மதியடைந்த பாலிவுட்
இனிமேலும், பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக் பலனளிக்காது என்றும் நல்ல படங்களை கொடுத்தால், ரசிகர்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை உணர்ந்து பாலிவுட் பிரபலங்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் உலகளவில் 100 கோடி வசூல் சாதனையை படம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1000 கோடி வருமா
இப்படியே போனால், இந்த ஆண்டின் மிகப்பெரிய் இண்டஸ்ட்ரி ஹிட்டாக பாலிவுட்டுக்கு பிரம்மாஸ்திரம் படம் அமையும் என்றும் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களின் வரிசையில் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை படம் எட்டுமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சுமார் 600 முதல் 700 கோடி வரை பிரம்மாஸ்திரம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.