அ.தி.மு.க அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கையால் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிந்தது. அந்தக் கூட்டத்தில் ஜுலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி ஒற்றைத் தலைமை கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஆளுநர் மாளிகை முற்றுகை: பழ. நெடுமாறன் உள்ளிட்ட 75 பேர் கைது
இந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை எதிர்த்து, ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றபோது, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க அலுவலகம் சென்றார். அங்கு இ.பி.எஸ் தரப்பினரும் இருந்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உள்ளது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடந்த 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. மேலும், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அ.தி.மு.க அலுவலக சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பண விவகாரங்களில் பன்னீர்செல்வம் கையாடல் செய்ததால் அவரிடம் அ.தி.மு.க அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது. ஓ.பி.எஸ் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறையினர் தாக்கல் செய்த பதில் மனுவில், இருதரப்பு மோததால் கலவரம் ஏற்பட்டது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் தான் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சாவியை இ.பி.எஸ் வசம் ஒப்படைத்த விஷயத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்பட்டுள்ளோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.பி.எஸ் மற்றும் வருவாய்த்துறையினர் பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil