சிஎம்டிஏ உறுப்பினர்களாக மேயர் ஆர்.பிரியா உட்பட 5 பேர் புதிய உறுப்பினர்களை நியமித்து வீட்டுவசதித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னை மாநகரம், இந்தியாவில் உள்ள நகரங்களில் 4-வது பெரிய நகரமாகும். இங்கு சென்னை மட்டுமல்லாது, அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
அதனால் சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், வேகமாக விரிவடைந்து வரும் புறநகர் பகுதிகளுக்கும் சென்று சேர்க்க வேண்டியுள்ளது. அதற்காக சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்) 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது 1,189 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. சிஎம்டிஏ எல்லையில் சென்னை மாநகரம் முழுவதும் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
இப்பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கான அனுமதியை இக்குழுமம் வழங்குகிறது. இதன் தலைவராக வீட்டுவசதித் துறை அமைச்சர் உள்ளார். மேலும் துணைத்தலைவர் மற்றும் 21 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சிஎம்டிஏ எல்லைப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளில் உள்ள 4 பேர், சிஎம்டிஏ உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,குன்றத்தூர் நகராட்சி தலைவர் கே.சத்தியமூர்த்தி, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் கே.தமிழரசி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜெ.உதயா ஆகியோரை சிஎம்டிஏ உறுப்பினர்களாக நியமித்து வீட்டுவசதித் துறை செயலர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்த உறுப்பினராக இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.