கீவ் : ரஷ்யாவின் பிடியில் இருந்த முக்கியமான தங்கள் நகரத்தை, கடும் சண்டைக்குப் பின் உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் வட கிழக்கு பகுதிகளில் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன.
இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையில், 1,400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. இதுதவிர, இரு நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சண்டையால் உக்ரைனுக்கு 80 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் வீரர்கள் மிகவும் ஆவேசமாக போரிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கார்கிவ் மாகாணத்தில் உள்ள குபியான்ஸ்க் நகரை, ரஷ்ய ராணுவத்திடமிருந்து மீட்டனர். நேற்று அதே மாகாணத்தில் உள்ள லிஜியும் நகரையும் உக்ரைன் ராணுவம் மீட்டது. பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே போட்டு விட்டு, ரஷ்ய ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர்.
லிஜியும் நகரை, ரஷ்ய ராணுவத்தினர் முக்கியமான போக்குவரத்து தளமாக வைத்திருந்தனர். தற்போது அந்த நகரை உக்ரைன் மீட்டுள்ளதால், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, உக்ரைனின் போக்ரோவொஸ்க், நிகோலவ் – கிரிவோய் ஆகிய மாகாணங்களில் ரஷ்ய ராணுவம் தன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement