சென்னை: “50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டுவர முடியாத மாற்றத்தை ராகுல் காந்தி 5 மாதம் நடந்து கொண்டு வந்துவிடுவாரா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக சார்பில், வரும் செப்டம்பர் 15-ம் தேதி ” திராவிட மாடல்” கொள்கை கோட்பாடுகள் எனும் புத்தகம் வெளியிடப்படவுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ” அது ஒரு வேடிக்கை. தமிழ் தேசிய இன மக்கள் எழுச்சியுற்று, தமிழ் தேசிய அரசியல் இதுவரை இந்த நிலத்தில், எங்களுடைய தாத்தாக்கள், மா.பொ.சி., சி.பா.ஆதித்தனார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.வெ.விசுவநாதம், அண்ணல் தங்கம், மறைமலை அடிகள், இவர்கள் எல்லாம் முன்னெடுத்ததைத் தாண்டி, இந்த தலைமுறை பிள்ளைகள், குறிப்பாக பிரபாகரன் பிள்ளைகள் அரசியல் களத்திற்கு வந்தபிறகு, பேரெழுச்சியாக பெரும் வளர்ச்சியாக வளர்ந்து வருகிறது.
அதற்காகத்தான், இதுவரை இல்லாத வகையில், திரும்ப திரும்ப திராவிடம், திராவிட மாடல் என்று பேசுவதற்கு காரணம் நாங்கள்தான். இதனால் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். அந்த புத்தகம் வந்தால் நானும் வாங்கிப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் எங்கே இருக்கிறது? சொந்த தொகுதியில் நின்று அவரால் வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிக் கொண்டு அவர்கள் தயவில், ஓட்டுக்கு காசு கொடுத்து வென்று இங்கு இருக்கின்றனரே தவிர, வேறு எங்கு இருக்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக எங்கு இருக்கிறது.
எதிர்க்கட்சி என்பது, எத்தனை இடங்கள் வென்று உள்ளே சென்று இருக்கிறோம் என்பது அல்ல. என்னவாக இயங்குகிறோம் என்பதுதான். அவர்கள் இயங்குவதுபோல் தெரியவில்லையே. ராகுல் காந்தி நடக்கிறார், அதனால் என்ன நடக்கும்?
50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டுவர முடியாத மாற்றத்தை 5 மாதம் நடந்து கொண்டு வந்துவிடுவாரா? ” என்று அவர் கூறினார்.