சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிம்பு பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில், தனது திருமணம், மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது குறித்து சிம்பு மனம் திறந்துள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெந்து தணிந்தது காடு
விண்ணத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் மூலம் சூப்பர் காம்போவாக உருவெடுத்தது சிம்பு, கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி. இவர்கள் 3வது முறையாக இணைந்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம், வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிம்பு பிஸியாக இருக்கிறார்.

மாநாடு இரண்டாம் பாகம் வரும்
ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம், சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, “வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். மாநாடு அந்த முயற்சியில் வெற்றிப் பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வெந்து தணிந்தது காடு, இன்னும் வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மூன்று தோற்றங்களில் மிரட்ட வரும் சிம்பு
தொடர்ந்து பேசியுள்ள சிம்பு, “வெந்து தணிந்தது காடு சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமாக இருக்கும். இந்தப் படத்தில் 3 தோற்றங்களில் நடித்துள்ளேன். அதில் ஒரு தோற்றத்தில் 19 வயது இளைஞனாக உருமாற்றி நடித்துள்ளேன். முதல் பாகம் வெற்றி பெற்றால் 2-ம் பாகமும் வரும். ஒரு படத்தில் பல ஹீரோக்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி, விஜய், அஜித் கூட்டணிக்கு நான் ரெடி
மேலும், “ரஜினி, விஜய், அஜித் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். அதேபோல், திருமணம் குறித்து யோசித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, அது நடக்கும் போது நடக்கட்டும். இப்போதெல்லாம் 2-வது, 3-வது திருமணங்கள் நிறைய நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க நல்ல பெண்ணுக்காக காத்திருப்பதில் தவறில்லை. நல்ல பெண்ணுக்காக காத்திருக்கிறேன்” என மனம் திறந்து பேசியுள்ளார்.