அருமனை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

அருமனை: அருமனை அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.  குமரி மாவட்டம் அருமனை அடுத்த சிதறால் அருகே வெள்ளாங்கோடு பாலவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பிள்ளை (47). தனியார் வாகனம் ஓட்டி வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (45). இந்த தம்பதிக்கு நித்யா (26) என்ற மகள் உண்டு. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நித்யாவுக்கு திருமணமானது. அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே குடும்ப பிரச்னை காரணமாக நித்யா கணவரை பிரிந்து கடந்த 2 மாதமாக பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது கிருஷ்ண பிள்ளைக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மனைவி ராஜேஸ்வரி சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக கிருஷ்ண பிள்ளை தெரிந்தவர்கள், நண்பர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். குடும்ப பிரச்னை, கடன் தொல்லை ஆகியவற்றால் விரக்தி அடைந்த கிருஷ்ண பிள்ளை குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு 3 பேரும் வீட்டில் தூங்கி உள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கிருஷ்ண பிள்ளை, ராஜேஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தனர். தகவலறிந்து அருமனை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் கிருஷ்ணன் எழுதி  வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை, மகளின் வாழ்க்கை ஆகியவற்றால் மன வேதனை ஏற்பட்டுள்ளது. ஆகவே சாவது என முடிவு செய்தோம். எங்களது உடல்களை குடும்பத்திற்கு சொந்தமான அரை சென்ட் நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.