சென்னை: “தேசிய நெடுஞ்சாலையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றால் செல்லாது என்ற சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கிறதோ, அதேபோல் குடிநீர் வடிகால் தோண்டும்போது, நீதிமன்றத்திற்கு சென்றால், செல்லாது என்ற சட்டம் இயற்றுங்கள். நீங்கள் சொன்ன காலத்தில் நாங்கள் திட்டங்களை முடிக்கிறோம்” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “செம்பரம்பாக்கம் ஏரிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அனுமதி வாங்க 3 ஆண்டு காலமாகிவிட்டது. இதனால் சென்னைக்கு வரவேண்டி 250 எம்எல்டி தண்ணீர் நின்றுகொண்டிருக்கிறது.
எப்படி தேசிய நெடுஞ்சாலையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றால் செல்லாது என்ற சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கிறதோ, அதேபோல் குடிநீர் வடிகால் தோண்டும்போது, நீதிமன்றத்திற்கு சென்றால், செல்லாது என்ற சட்டம் இயற்றுங்கள். நீங்கள் சொன்ன காலத்தில் நாங்கள் திட்டங்களை முடிக்கிறோம். நீதிமன்ற வழக்குகளால் திட்டப்பணிகள் தாமதமாகின்றன.
காவிரி, கொள்ளிடத்தில் மட்டும் 300 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. தமிழகத்தில் பாலாறு, தென் பெண்ணையாற்றில் 200 டிஎம்சி என பல ஆறுகளின் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க வலியுறுத்தி முதல்வரிடம் புதிய திட்டம் ஏதாவது ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.