கோவை: கோவையில் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு திரண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 31 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (செப்.13) சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையை அறிந்து எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு திமுக அரசைக் கண்டித்தும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பிய அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்கள் அனைவரும் கோவை புதூரில் உள்ள மண்டபத்திலும், பெண்கள் அனைவரும் இடையர்பாளையத்தில் உள்ள மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் , தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது போலீஸ் அதிகாரிகளுடன் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின் முதலில் பெண்களையும், அதைத் தொடர்ந்தும் ஆண்களையும் போலீஸார் பிணையில் விடுவித்தனர்.