திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த 12 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. கேரள காவல்துறை இந்த திட்டத்தை இலவசமாக செயல்படுத்தி வந்தது. இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதற்கு கேரள காவல் துறையும் சம்மதித்தது.
இதைத் தொடர்ந்து, ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க டாடா கன்சல்டன்சி நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு, டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபனின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் தேவசம் போர்டு ஆணையாளர் பிரகாஷ் மற்றும் டாடா நிறுவன முதுநிலை பொது மேலாளர் எஸ்.கே. நாயர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.