சென்னை: பதிவு செய்யப்படாத பள்ளி விடுதிகள் மற்றும் இல்லங்கள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
சென்னை ராயப்பேட்டையில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். ஆய்வை தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகளை சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
தேசிய ஆணையம் உத்தரவு: அந்த விடுதியில் மாணவிகளை மதம் மாறும்படி வற்புறுத்துவதால் பிற மாணவிகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழகஅரசுக்கு கடந்த சில தினங்களுக்குமுன்பு கடிதம் அனுப்பியது. மேலும், அந்த கடிதத்தில், நடவடிக்கை எடுத்தது தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பும்படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தனர்.
அப்போது, ராயப்பேட்டையில் உள்ள பள்ளி விடுதியின் நிலை மற்றும் தாங்கள் இதுவரை ஆய்வு செய்துள்ள பிற பள்ளி விடுதி, இல்லங்களின் நிலையை விளக்கி 85 பக்க அறிக்கையை ஆளுநரிடம் வழங்கினர்.