சென்னை : நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம்.
இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் கண்டிப்பாக சிறப்பான வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய கௌதம் மேனன் விக்ரம் நடிப்பில் தான் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் குறித்தும் அப்டேட் தெரிவித்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படம்
நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகின்றனர். மேலும் பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

நிறுத்தப்பட்ட சூட்டிங்
படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. கௌதம் மேனன் மற்றும் விக்ரம் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்தான் சூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மீண்டும் சூட்டிங்
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. படத்தின் சில பேட்ச் வொர்க் மட்டுமே மீதமுள்ளதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

பல நாடுகளில் சூட்டிங்
கௌதம் மேனன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு அவரது பேவரைட் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நியூயார்க்கில் துவங்கி, பல நாடுகளில் நடத்தப்பட்டது.

ரசிகர்கள் கேள்வி
இந்நிலையில், இன்றைய தினம் கௌதம் மேனன் -சிம்பு கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய இயக்குநர் கௌதம் மேனன், படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இதனிடையே துருவ நட்சத்திரம் குறித்து நடிகர் விக்ரமின் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

3 மாதங்களில் துருவ நட்சத்திரம்?
இதற்கு பதிலளித்து பேசிய கௌதம் மேனன், இந்தப் படத்தை முடிக்க தான் தயாராக உள்ளதாகவும் இன்னும் 3 மாதங்களில் படம் ரிலீசாகும் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள துருவ நட்சத்திரம் வெளியானால் அது அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.