தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் துவங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது?
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் துவங்கிவத்தார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதோடு, அவர்களோடு அமர்ந்து உணவும் உட்கொண்டார். அந்தப் பள்ளிக்கூடத்தின் குறிப்பேட்டில், “திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று தொடங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்ற வாழ்த்துச் செய்தி ஒன்றையும் எழுதினார்
இதற்குப் பிறகு உரையாற்றிய முதலமைச்சர், “பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது இன்று எண்ணியதாலேயே காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினேன். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எவ்வாறு கனிவோடும் அக்கறையோடும் உணவு வழங்குகிறீர்களோ, அதைவிட கூடுதல் கவனத்தோடு கனிவோடும் உணவு வழங்கப்படும். கல்வி நம் போராடி பெற்ற உரிமை. படிப்பு ஒன்று தான் உங்களிடம் இருந்து யாராலும் அபகரிக்க முடியாத சொத்து. உங்களுடைய மற்ற கவலைகள், தேவைகள் என்ன என்பதை நிறைவு செய்வதற்காக தான் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
- தூய்மை பணியாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் முறைகேடு? என்ன நடக்கிறது?
- அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் வென்றது எப்படி?
- ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை – பின்னணி என்ன?
படித்து தான் ஆக வேண்டுமா? படிக்காத நபர்களும் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த படிப்பை தான் படிக்க வேண்டுமா? வேற படிப்பே இல்லையா? என்று கூறுபவர்களை முட்டாளாக பாருங்கள். நீங்கள் படித்து அறிவார்ந்த சமூகமாக முன்னேற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் கல்வியை விட்டு விடாதீர்கள். விலகிச் செல்லவும் நான் விடமாட்டேன்” என்று குறிப்பிட்டார்.
காலை உணவுத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து பதினான்காயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளி வேலை நாட்களில் அரசு பட்டியலிட்டுள்ள சிற்றுண்டிகளில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களாவது அந்தப் பகுதியில் விளையும் சிறு தானியங்களின் அடிப்படையிலான உணவை வழங்க வேண்டும்.
மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருப்பது, பணிக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தற்போது 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குக் கிடைக்கும் பலன்களைப் பொறுத்து, இதனை விரிவுபடுத்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்திற்கான உணவு, அந்தந்தப் பள்ளிகளில் சமைக்கப்படுவதைப் போல அல்லாமல், இந்தத் திட்டத்திற்கான உணவுகள் மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் சமைக்கப்பட்டு, வாகனங்களின் மூலம் பள்ளிக்கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிமாறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதென்பது நீண்ட காலமாகவே நடைமுறையில் இருந்துவருகிறது. 1922ல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. 1956ல் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்குப் பிறகு 1982ஆம் ஆண்டு இந்தத் திட்டம் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.
அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனால் ஊரகப் பகுதிகளில் 01.07.1982ஆம் தேதியன்றும் நகர்ப்புறப் பகுதியில் அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டம் சத்துணவுத் திட்டம் என அழைக்கப்பட்டது. சுமார் 60 இலட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 15,500 மேற்பட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் நியமனம், குழந்தைகள் காப்பகங்கள் உதவியாளர், சமையல்காரர்கள் என்று ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
மதிய உணவு ஒன்றுக்கு ஆகும் 45 காசு செலவு முழுவதையும் அரசே நேரடியாகத் தந்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தினசரி வருகையும் அதிகரித்தது ஆய்வுகளில் தெரியவந்தது. இதற்குப் பிறகு 1989லிருந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த பயன்களை அடுத்து 1995ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்