சென்னை: இசை அரசி ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளில் (செப்டம்பர் 16), அவரது நினைவைப் போற்றும் ஒரு நிகழ்வை வயலின் வித்வான் ஆர்.கே. ஸ்ரீராம்குமார், கர்னாடக இசைப் பாடகி அம்ரிதா முரளி குழுவினர் சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியின் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்) எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கத்தில் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சி முழுவதும் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட வில்லை. அத்தகைய கட்டமைப்புடன் அரங்கம் உருவாக்கப்பட்டிருந்ததும் கூடுதல் சிறப்பு.
கூட்டு பிரார்த்தனைபோல்…
எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும்போது, ரசிகர்களையும் பக்தர்களாக்கி அவர்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டுவிடுவார். ஒரு கூட்டுப் பிரார்த்தனைபோலவே அவரது இசை நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும். இதற்காக எம்.எஸ். எப்படிப்பட்ட சிரத்தை எடுத்துக் கொள்வார் என்பதை, அவருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்த ஆர்.கே.ஸ்ரீராம்குமார் மிக நுட்பமாக பகிர்ந்து கொண்டார்.
பக்தியும், பாவமும் இணைந்தது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சங்கீதம். அவரது இசையைக் கேட்டவர்கள் மெய்மறந்து தங்களை இறையோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும் தியான நிலைக்குச் சென்றனர். இசை மீதான அர்ப்பணிப்பு, தினசரி பயிற்சி, உச்சரிப்பு சுத்தம், ஸ்ருதி சுத்தம், எந்த மொழியில் பாடினாலும் அதற்கான அர்த்தத்தை உரிய நிபுணர்களுடன் கலந்துபேசி தெரிந்து கொண்டு பாடும் சிரத்தை போன்றவற்றை உதாரணங்களோடு விளக்கினார் ஸ்ரீராம் குமார். அவரது விளக்கத்துக்கு பிறகு, எம்.எஸ். பாடிய அந்த குறிப்பிட்ட பாடலை அம்ரிதா முரளி பாடினார்.
ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் எல்லாம் வைத்து எம்.எஸ். பாடமாட்டார். அவரிடம் இருந்து பிறக்கும் முதல் ஸ்வரப் பிரயோகத்திலேயே அது என்ன ராகம் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துவிடுவார். எம்.எஸ்.ஸின் ஆலாபனை, அவர்ஸ்வரம் பாடும் முறை, நிரவல் பாடுவதில் வெளிப்படும் நேர்த்தி, காலப்பிரமாணத்தில் வெளிப்படும் துல்லியம் என பல நுட்பங்களையும் ஸ்ரீ ராம்குமார் மிகவும் நுணுக்கமாக, விரிவாக ரசிகர்களுடன் பகிர்ந்ததும், உடனடியாக அந்த நுட்பத்தை நேரடியாக அம்ரிதா பாடி விளக்கியதும் நேரடியாக எம்.எஸ்.ஸின் கச்சேரியைப் பார்க்கும் அனுபவத்தை தந்தது.
எம்.எஸ். பாடிப் பிரபலப்படுத்திய விரிபோனி வர்ணம், மீரா பஜன் போன்ற பாடல்களைப் பாடி, ரசிகர்களை மகிழ்வித்தார் அம்ரிதா. அவருக்கு அருண்பிரகாஷின் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயாவின் கஞ்சிரா, என்.குருபிரசாத்தின் கடம் ஆகியவை பக்கபலமான இசைக் கூட்டணியாக அமைந்தது.