அரசியலில் நான் இல்லை, ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை: சிரஞ்சீவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்துவரும் சிரஞ்சீவி கடந்த 2008ல் ‛பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை துவக்கினார். 2009ல் நடந்த தேர்தலில், 20 சதவீத ஓட்டுகளைப் பெற்ற சிரஞ்சீவி, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பலேகால், திருப்பதி என இரு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி, சொந்த ஊரான பலேகால் தொகுதியில் தோல்வியடைந்தார். திருப்பதி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு அடுத்த சில ஆண்டுகளில் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டதுடன் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரானார். 2014ம் ஆண்டுடோடு அரசியலிலிருந்து முழுவதுமாக விலகினார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார்.

சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணும் அரசியலில் குதித்தார். ‛ஜனசேனா' என்ற புதிய கட்சியைத் துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை' எனப் பேசியுள்ளார். இந்த ஆடியோவால் சிரஞ்சீவி ஏதேனும் கட்சியில் இணையப்போகிறாரா அல்லது தனது சகோதரரின் கட்சிக்காக பிரசாரம் செய்யப் போகிறாரா அல்லது ஜெகன்மோகன் கட்சிக்கோ பா.ஜ.,வுக்கோ பிரசாரம் செய்யப் போகிறாரா என்ற பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிரஞ்சீவி நடித்துள்ள ‛காட்பாதர்' படம் அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக கூட சிரஞ்சீவி, இந்த அரசியல் வசனம் பேசியிருக்கலாம் எனவும் ஒருசிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும், சிரஞ்சீவியின் இந்த ஆடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.