ஊக்கத் தொகை ரத்து, 4 ஷிஃப்டாக மாற்றியதால் 16 மணி நேர பணி: சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் போராட்டம்

சென்னை: ஊக்கத் தொகை ரத்து, பணி நேரம் மாற்றம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஸ்விகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட பல பொருட்களை டெலிவரி செய்யும் பணியை செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நிறுவன ஊழியர்கள் கூறுகையில், “பழைய விதிமுறைகளின்படி காலை 6 மணிக்கு பணியை தொடங்கி இரவு 9 மணி வரை பணியாற்ற வேண்டும்.

இதன்படி நாங்கள் பணியாற்றும் தொகை ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு கிடைக்கும். இதன் உடன் சேர்ந்து வாராந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 மற்றும் பெட்ரோல் தொகையாக ரூ.460 என்று மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும். இதில் பெட்ரோல் செலவு ரூ.4 ஆயிரம் போக மீதம் ரூ.6 ஆயிரம் இருக்கும். இதில் அடுத்த வாரத்திற்கான பெட்ரோல் செலவுக்கு பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு, மீதம் உள்ள தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

ஆனால், தற்போது உள்ள புதிய விதிகளின்படி இவை அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி காலை 5.30 மணிக்கு பணியை தொடங்கி இரவு 11 மணி வரை பணியாற்ற வேண்டும். இந்த நேரம் 4 ஷிஃப்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 5.30 மணி முதல் காலை 11 மணி வரை, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை, மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக பனிச் சுமை ஏற்படுகிறது. ஊக்கத் தொகையும் குறைகிறது. காலை 5.30 மணி முதல் 11 வரையிலான ஷிப்டுக்கு ஊக்கத் தொகையான ரூ.90 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி 25 முதல் 30 ஆர்டர்களை வரை பார்க்க வேண்டும். இதற்கு முன்பு பெட்ரோல் தொகையாக ஒரு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் கொடுத்தார்கள். தற்போது அதை 3 ரூபாய் ஆக குறைத்து உள்ளார்கள். மழை, இரவு, பகல் பராமல் ஸ்விகி நிறுவனத்திற்கு பணியாற்றி வருகிறோம். நாங்கள் ஒரு நாளும் ஸ்விகி நிறுவனத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. ஆனால் ஸ்விகி நிறுவனம் எங்களை விட்டுக் கொடுக்கிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.