கோவை: யூடியூப்பர் மற்றும் பைக்கர் என அறியப்படுகின்ற டிடிஎப் வாசன் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் டிடிஎப் வாசன் சில மாதங்கள் முன் நடத்திய ‘மீட்டப்’பைத் தொடர்ந்து பொதுவெளியிலும் பிரபலமாக இருந்துவருகிறார். இதனிடையே, சில தினங்கள் முன் இவர், டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சகாசம் செய்திருந்தார். அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அது வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு கோவை காவல்துறை டிடிஎப் வாசன்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “டிடிஎப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின்சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக போத்தனுர் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுளள்து.