சென்னை : மணிரத்னத்தின் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் கலக்கலான கேரக்டர்களில் நடித்துள்ளன.
இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளன.
பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் 10 தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் மணிரத்னத்தின் கனவு பிராஜக்ட் மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் கனவு பிராஜெக்ட் தான்.

கல்கியின் எழுத்துநடை
பொன்னியின் செல்வன் கல்கியின் அழகான எழுத்துநடையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த படைப்பு. இந்த நாவலை படிக்கும்போதே, சோழ தேசத்தில் வாழ்ந்த உணர்வை இந்த நாவல் கொடுத்தது. இந்நிலையில் இந்த படைப்பு தற்போது திரைவடிவம் பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்
இன்னும் சில தினங்களில் ரசிகர்களை சென்றடையவுள்ள இந்தப் படத்தின் சிறப்பான பிரமோஷனை படக்குழு சில தினங்களுக்கு முன்பே துவக்கிவிட்டது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சில வாரங்களுக்கு முன்பே துவக்கிவிட்டது என்று கூறலாம். படத்தின் டீசர், இரு பாடல்கள் என அடுத்தடுத்து பிரம்மாண்டமாக சென்னை, ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.

இசை வெளியீடு
படத்தில் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டத்தின் உச்சமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்டது. இதில் திரையுலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரில் தற்போது படக்குழுவினர் கேரளாவில் முற்றுகையிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் நகைச்சுவை
இதனிடையே, இந்தப் படத்தில் யானை ஒன்றுடனான தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய நடிகர் ஜெயம்ரவி, இதில் இயக்குநர் மணிரத்னத்தின் நகைச்சுவை உணர்வு குறித்தும் குறிப்பிட்டுள்ளார். யானை தன்னுடைய இயல்பாக பழக அதன் காதில் எதையாவது சொல்லுமாறு மற்றவர்கள் கூற, அதை செயல்படுத்தியுள்ளார் ஜெயம்ரவி.

ஜெயம் ரவி உற்சாகம்
அப்போது அங்குவந்த இயக்குநர் மணிரத்னம், என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயம்ரவி, எதையாவது சொல்கிறேன் சார் என்று கூற, எதற்கும் படம் சீக்கிரம் முடியவேண்டும் என்று சொல் என்று கூறியிருக்கிறார். இதை படக்குழுவினருடனான தனது சமீபத்திய டிஸ்கஷனில் தெரிவித்துள்ளார்.

அரிதான நகைச்சுவை
மணிரத்னம் எப்போதாவதுதான் தன்னுடைய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவார் என்றும் ஆனால் அதை நாம் நீண்ட நாட்கள் மனதில் வைத்துக் கொள்ளும்வகையில் அமையும் என்றும் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். அது உண்மைதான் என்பது அவருடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.