சென்னை : இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பிறந்த முருகதாஸ் கல்லூரியில் படிக்கும்போது கதை எழுதுவதிலும் திரைப்படங்களிலும் ஆர்வம் கொண்டார். தினமும் ஏதாவது ஒரு படத்தை பார்த்து திரைப்படக் கலையை உள்வாங்கத் தொடங்கினார்.
பிரவீண் காந்தி இயக்கத்தில் 1997இல் வெளியான ரட்சகன் படத்தில் உதவி இயக்குநராகவும் அதே ஆண்டில் வெளியான கலுசுகுந்தம் ரா என்ற தெலுங்குப் படத்திலும், குஷி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
ஏ.ஆர்.முருகதாஸ்
குஷி படத்தில் ஏ.ஆர்.முருகதாசின் திறமையான உழைப்பால் கவரப்பட்ட எஸ்.ஜே.சூர்யா இவரை அஜித்துக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் அஜித் நடித்த ‘தீனா’ படத்தை இயக்கினார் முருகதாஸ். அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா திரைப்படத்திற்கு உண்டு. அந்த படத்திற்கு முன்பு சில தோல்விகளால் துவண்டு போயிருந்த அஜித்துக்கு இப்படம் மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது.

வெற்றிப்படம்
தீனா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். அரசு அதிகாரிகளிடம் புரையோடிப் போயிருக்கும் ஊழலை சொல்லும் வெகுஜன படமாக அமைந்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து, கஜினி என்ற ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்னும் புதுமையான கதைக்களத்தை கொடுத்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது.

மீண்டும் இணையவில்லை
அதன் பின் மீண்டும் சூரியாவுடன் ஏழாம் அறிவு, விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என வெற்றிப்படங்களை கொடுத்தார். தர்பார் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் மீண்டும் இணையவில்லை.

வாழ்த்து சொன்ன வரலட்சுமி
இந்நிலையில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள்,நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏஆர் முருகதாஸூடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து எனக்குப் பிடித்தமானவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.