புதுடில்லி: நாடு முழுதும் ஏழு மாநிலங்களில் போலீசார் நேற்று மீண்டும் நடத்திய சோதனையில் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கைது செய்தனர். ஏற்கனவே நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இது புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டுஎழுந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு 19 வழக்குகளை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் என்.ஐ.ஏ. – அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தியது. பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், நிர்வாகிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அன்றைய தினம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.இந்த விசாரணையின் அடிப்படையில் உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத், டில்லி, மஹாராஷ்டிரா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் நேற்று மீண்டும் சோதனை நடந்தது. மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில போலீசார் இந்த சோதனையை நடத்தினர்.
உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு படை சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து 26 மாவட்டங்களில் மாநில போலீசார் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. 57 பேரை போலீசார் கைது செய்தனர்.வடகிழக்கு மாநிலமான அசாமில் 25 பி.எப்.ஐ. உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுடில்லியின் நிஜாமுதின், ஷாஹீன் பாக் பகுதியில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை நடந்த இடங்களில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மத்திய பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் இருந்து 21 பேர் கைது செய்யப்பட்டனர். பி.எப்.ஐ. அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ. எனப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சி சமீபத்தில் குஜராத்தின் ஆமதாபாதில் அலுவலகம் திறந்தது. இங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென் கர்நாடகாவின் தக் ஷின கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் நடந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நான்கு பேரும் புனேவில் ஆறு பேரும் கைதாகினர்.கடந்த வாரம் நடந்த சோதனை, கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எப்.ஐ. அமைப்பினர் கேரளாவில் முழு அடைப்பு நடத்தினர்.
அப்போது பல்வேறு வன்முறைகள் அரங்கேறின. தமிழகத்தில் பா.ஜ. நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் நடந்த சோதனையில் ஏழு மாநிலங்களில் மொத்தம் 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதாகி உள்ள பி.எப்.ஐ. நிர்வாகிகளை கடந்த ஆறு மாதங்களாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement