கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துவங்கப்பட்ட, ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ எனப்படும், ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஏழாவது முறையாக டிசம்பர் வரை நீட்டிக்க, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது, மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காக, பல்வேறு உதவி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை, 2020 ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது. சர்வதேச அளவில் மிகப் பெரிய உணவு பாதுகாப்பு திட்டமாக இது திகழ்கிறது.இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுடன், ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுதும், 80 கோடி பேர் பயன் அடைகின்றனர். கொரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்த பிறகும், இலவச உணவு தானிய திட்டத்தை திரும்ப பெறாமல் மத்திய அரசு நீட்டித்து வந்தது. இதுவரை ஆறு முறை இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் புதுடில்லியில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில், இலவச உணவு தானிய திட்டத்தை ஏழாவது முறையாக மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அ
மைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது:வரும் நாட்களில் நவராத்திரி, தசரா, மிலாது நபி, தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. இந்த பண்டிகைகளை ஏழை எளிய மக்கள் சிரமம் இன்றி கொண்டாட வேண்டும். இதை மனதில் வைத்து, இலவச உணவு தானிய திட்டத்தை டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.இந்த திட்டம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக மத்திய அரசுக்கு கூடுதலாக 3.45 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று மாத நீட்டிப்பால், மேலும் 44 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த ஏழு கட்ட நீட்டிப்பையும் சேர்த்தால், இலவச உணவு தானிய திட்டத்தில் மொத்தம் 3.91 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3 ரயில் நிலையங்கள் சீரமைப்பு!
புதுடில்லி, குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் மஹாராஷ்டிராவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையங்களை, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
புதுடில்லியில் ரயில் சேவையுடன் பஸ், ஆட்டோ மற்றும் ‘மெட்ரோ’ ரயில் சேவையை இணைக்கும் விதமாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. குஜராத்தின் மோதரா கிராமத்தில் உள்ள சூரிய கோவிலின் வடிவில், ஆமதாபாத் ரயில் நிலையம் வடிவமைக்கப்பட உள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் பாரம்பரிய கட்டடத்தில் மாற்றம் செய்யாமல், அதை சுற்றியுள்ள கட்டடங்கள் மட்டும் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்